கஜா புயல்; தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது: ப.சிதம்பரம்

கஜா புயலின் போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-17 12:18 GMT
காரைக்குடி,

கஜா புயல் காரணமாக, தஞ்சை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் 471 நிவாரண முகாம்களில் 82 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கப்பட்டது. தலா 25 பேர் கொண்ட 8 தேசிய பேரிடர் மீட்பு குழு படையினர், 4 மாநில பேரிடர் மீட்பு படையினர், முதல்நிலை மீட்பாளர்கள் 30 ஆயிரம் பேர், கடலோரங்களில் பயிற்சி பெற்ற மீட்பாளர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

வெகுவிரைவில் மக்களை சகஜநிலைக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வந்தன.

முதல்-அமைச்சர் உத்தரவின்படி அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் தங்கி முகாமிட்டு பணிகளை மேற்கொண்டனர். சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.  அவர் கூறும்பொழுது, கஜா புயலின் போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசு ஆய்வு குழுவை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்