கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1,000 கோடி உடனடியாக விடுவிப்பு; முதல் அமைச்சர் பழனிசாமி

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1,000 கோடி உடனடியாக விடுவிக்கப்படுகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

Update: 2018-11-19 15:42 GMT
சென்னை,

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.  இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன.

புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், புயல் பாதிப்பு பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டி, சேலை வழங்கப்படும்.  முகாம்களில் தங்கியுள்ள பெரியோர், பெண்கள், குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் வழியே பால் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கஜா புயலால் இறந்தோரூக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் முன்பே அறிவிக்கப்பட்டு உள்ளது.  காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம், சாதாரண காயத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

புயலால் உயிரிழந்த 1,181 ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், 14,986 கோழி, பறவைகளுக்கு தலா ரூ.100 வழங்கப்படும்.

உயிரிழந்த 231 பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம், 20 காளை மாடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 19 கன்றுகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்