டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். படத்துக்கு தடை கோரும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில், இயக்குனர் பதில் மனு

டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். படத்துக்கு தடை கோரும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில், இயக்குனர் பதில் மனு

Update: 2018-11-30 22:15 GMT
சென்னை,

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதா குறித்து, ‘டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்.’ என்ற திரைப்படம் எடுக்க தடை கேட்டு அனிதாவின் தந்தை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்காக நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், ‘டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்.’ என்ற திரைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்துக்கு தடை கேட்டு அனிதாவின் தந்தை சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி இல்லாமல் தன் மகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் அஜய்குமார் என்பவர் தனக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தின் இயக்குனர் அஜய்குமார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்த திரைப்படம் லாபநோக்கத்துடன் எடுப்பதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டை மறுக்கிறேன். தங்க நகைகளை அடகு வைத்தும், நண்பர்களிடம் இருந்து கடன் பெற்றும், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறேன். ஏற்கனவே, செல்வி டாக்டர் அனிதா, அனிதா எம்.பி.பி.எஸ்., அனிதாவின் கனவுகள் என்று பல குறும்படங்கள் வெளிவந்துள்ளது.

மேலும், அனிதாவின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த திரைப் படத்தை எடுக்கவில்லை. ஆனால், அனிதாவின் சகோதரர், பா.ஜ.க.வின் கொள்கையை வெளிப்படுத்தவும், அனிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் நான் படம் எடுப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், எந்த ஒரு அரசியல் கட்சியிடம் இருந்தும் ஒரு பைசா கூட நான் வாங்கவில்லை. தற்கொலைக்கு எதிராக நான் படம் எடுத்து வருகிறேன். அனிதா மறைவுக்கு பிறகு, உலகம் முழுவதும் அவருக்கு ஏராளமான சகோதரர் கள் உருவாகியுள்ளனர். அதில் ஒருவரான நான், இந்த படத்தை எடுக்கிறேன். அவரது பெயருக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தவில்லை. என்னுடைய படத்தை பார்க்காமலேயே, அனிதாவின் தந்தை இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அஜய்குமார் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்