தேர்தல் அமைதியாக நடக்க வேண்டி கண்களை கட்டிக்கொண்டு தவில் வாசித்த பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டி, மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 12 மணி நேரம் தவில் வாசித்தனர்.

Update: 2019-03-18 21:30 GMT
நெல்லை, 

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தலில் பொதுமக்கள் பயமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யும் வகையில், துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 6-ம் திருநாளை முன்னிட்டு நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது. வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்கள் ராம்குமார், சிவராம், முத்துக்குமார், நவீன், தருண்செல்வம் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடக்க வேண்டி கண்களை கட்டிக் கொண்டு தொடர்ந்து 12 மணி நேரம் தவில் வாசித்தனர். கின்னஸ் சாதனைக்காகவும் அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர்.

காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தவில் வாசித்தனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து, மாணவர்களை பாராட்டினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் அப்துல் ஹலீம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்