பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பதில் தெரிவிக்காத சி.பி.ஐ. இயக்குனருக்கு நோட்டீஸ் ஐகோர்ட்டு உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்குகளை தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், பதில் எதுவும் தெரிவிக்காத சி.பி.ஐ. இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-24 22:30 GMT
சென்னை, 

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள், பெண் டாக்டர்கள் உள்ளிட்டோரை ஒரு கும்பல் பாலியல் ரீதியாக கொடுமை செய்து, அதை வீடியோ படம் எடுத்து, பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பாலியல் விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தியது. பின்னர், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த வக்கீல் எஸ்.வாசுகி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘பொள்ளாச்சியில் 70-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில், அரசியல்வாதிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பான விசாரணையை கண்காணிக்க ஐகோர்ட்டு நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் 2 பெண்கள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

போலீஸ் அதிகாரி பதில்

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பதில் மனுதாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பிப்ரவரி 24-ந் தேதி புகார் கொடுத்தார். அதில், ‘பிப்ரவரி 12-ந் தேதி சபரிராஜன் காரில் காத்திருந்தார். நான் காருக்குள் ஏறியதும், வசந்தகுமார், சதீஷ், திருநாவுக்கரசு என்று ஒவ்வொருவராக காருக்குள் ஏறினர். கார் தாராபுரம் ரோட்டில் செல்லும்போது, அவர்கள் என்னுடைய மேலாடையை கட்டாயப்படுத்தி அவிழ்த்து, வீடியோ படம் எடுத்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது, கேட்கும்போது பணம் தரவேண்டும் என்று மிரட்டிவிட்டு, காரில் இருந்து இறக்கி விட்டனர்’ என்று அந்த மாணவி கூறியிருந்தார்.

கார் பறிமுதல்

போலீசில் புகார் செய்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை ஒரு கும்பல் அடித்து உதைத்துள்ளது. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின்போது, பொள்ளாச்சி பாலியல் வீடியோவை வெளியிட வேண்டாம் என்று சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்ய வசதியாக தொலைபேசி எண்ணும் விளம்பரப்படுத்தப்பட்டது.

பெண்கள் கற்பழிப்பு

பல பெண்களை கூட்டாக குற்றவாளிகள் கற்பழித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில், இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து இதுவரை சி.பி.ஐ. தரப்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கனிமொழி மதி, ‘எந்த புலனாய்வு அமைப்பு இந்த பாலியல் வழக்குகளை விசாரிக்க போகிறது? என்ற விவரம் கூட தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளது’ என்று வாதிட்டார்.

சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்

இதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘இதுவரை சி.பி.ஐ. வசம் வழக்குகள் ஏன் ஒப்படைக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், ‘சி.பி.ஐ. தரப்பிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அதனால், சி.பி.சி.ஐ.டி. போலீசாரே விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பும் எதிர்மனுதாரராக உள்ளதால், தகுந்த உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பிக்கலாம்’ என்று வாதிட்டார்.

பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, சி.பி.ஐ. இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்