‘‘கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை’’ திருமாவளவன் வலியுறுத்தல்

‘விருத்தாசலம் கல்லூரி மாணவி திலகவதி படுகொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை’’ என தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-05-15 22:00 GMT
சென்னை, 

‘‘விருத்தாசலம் கல்லூரி மாணவி திலகவதி படுகொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை’’ என தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

ஆர்ப்பாட்டம் 

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:–

சி.பி.ஐ. விசாரணை 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி கடந்த 8–ந்தேதி காட்டுமிராண்டி கும்பலால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இந்த விவகாரத்தில் சாதி–மத மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு போலீசார் இசைந்து கொடுக்கக்கூடும் என்பதால் சி.பி.ஐ. விசாரணை தேவை. திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.

அதேபோல திருவாரூர் மாவட்டம் திருவாண்டுதுறை கிராமத்தை சேர்ந்த கொல்லிமலை என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி, அவரை அருவருப்பான சாதி ஆதிக்க வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.

அரசியல் ஆதாயம் 

திலகவதி படுகொலையை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொள்ள பா.ம.க. துடிக்கிறது. சமூகத்தில் எங்கு பாலியல் குற்றங்கள் நடந்தாலும், வன்கொடுமை சம்பவங்கள் நடந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்புபடுத்தி பேசுவதை டாக்டர் ராமதாஸ் வழக்கமாக கொண்டு அவதூறு பரப்பி வருகிறார். சாதியின் பெயரால் தலித் மற்றும் தலித் அல்லாதோர் என தமிழக அரசியலை இருதுருவமாக்க துடிக்கிறார். இது சமூக நல்லிணக்கத்தை பாதிக்க செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்