கைகளில் பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறுகளை அணிகிறார்களா? ஆய்வு செய்ய கல்வித்துறை உத்தரவு

கைகளில் பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறுகளை அணிகிறார்களா? என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Update: 2019-08-13 23:50 GMT
சென்னை, 

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகள் அரசுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பி இருக்கின்றனர். அதில், தமிழகத்தின் பள்ளிகளில் சாதி ரீதியாக தெரியப்படுத்த சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிறம் உள்பட பல வண்ணக் கயிறுகளை மாணவர்கள் அணிய கட்டாயப்படுத்துவதாகவும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு பார்ப்பதற்கு ஏதுவாக இந்த செயல் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், மோதிரம் மற்றும் நெற்றியில் திலகமிடுவதும் ஒருவித சாதிய பாகுபாட்டை காட்டும் விதமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து விளையாட்டு தேர்வு, வகுப்பு மற்றும் உணவு இடைவேளை நேரம் ஒதுக்குவது ஆகியவை நடத்தப்படுவதாகவும், சாதிய பாகுபாடு பார்ப்பவர் கள், ஆசிரியர்கள் இந்த செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்த கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து தமிழகத்தின் பள்ளிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தி, இந்த சம்பவங்கள் எந்த பள்ளிகளில் நடக்கின்றன என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதபடிக்கு அறிவுரை வழங்க வேண்டும். இந்த பாகுபாடு பார்ப்பவர்கள் யார்? என்பதை கண்டறிந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நாட்டு நலப்பணித்திட்டம்(என்.எஸ்.எஸ்.) இணை இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்