இளம்பெண் சுபஸ்ரீ மரணம்: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை பள்ளிக்கரணை அருகே இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-09-14 10:52 GMT
சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று  முன்தினம் மாலை பணி முடிந்து சுபஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அவர் சென்ற போது அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவிலும், ஓரமும் ‘பேனர்’கள் வைத்து இருந்தனர்.

சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் கோவிலம்பாக்கம் நோக்கி வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது. தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய சுபஸ்ரீ, அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.  தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக, இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் ஜெயகோபாலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்