2-வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டாவது முறையாக 120 அடியை எட்டி உள்ளது.

Update: 2019-09-24 11:25 GMT
சேலம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்குமென கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை முழு கொள்ளவான 120 அடியை எட்டியதால் முழுநீர்வரத்தும் வெளியேற்றப்படும். மேட்டூர் அணைக்கு இன்று மாலை நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும், இன்று இரவு 12 மணிக்குள் நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியை தாண்டும் என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டாவது முறையாக  120 அடியை எட்டியதை அடுத்து மீண்டும் 16-கண் உபரி நீர் போக்கி வழியாக  நீர் திறக்கப்பட்டுள்ளது. 

அணையின் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு இருபதாயிரம் கன அடியும், அணையின் 16- கண் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு ஏழாயிரத்து 500 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு  கால்வாயில் வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சுரங்க மின் நிலையங்களில் அதன் முழு அளவு உற்பத்தியான 250 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்