தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கணவன் கொலை நண்பருடன் மனைவி கைது

தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொலை செய்த மனைவி நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-10-15 10:32 GMT
சென்னை:

புழல் புத்தகரம் வெங்கடசாய் நகர் 13-வது தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ். சுரேஷ் விழுப்புரத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்றபோது அங்கே வந்த விழுப்புரம் முகையூரைச் சேர்ந்த அனுசுயாவை சந்தித்துள்ளார்.

பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருக்கிறான்.

சுரேஷ் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வந்தார். பட்டதாரியான அனுசுயா மருந்து கடையில் பணிபுரிந்து வருகிறார்.

சமீபகாலமாக  அனுசுயா நீண்ட நேரம் யாரிடமோ மொபைல் போனில் பேசிவந்தார். இதனால் அனுசுயாவின் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை அடித்து உதைத்தார்.

இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  சுரேஷ் மரணம் குறித்து அனுசுயாவிடம்  விசாரித்தனர். அவர் நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு திரும்பி வருவதற்குள் தனது கணவர் வீட்டில் இறந்து கிடந்தார். அதிகமாக மது அருந்தியதால் அவர் இறந்து இருக்கலாம் என்று கூறினார்.

ஆனால் சுரேசின் கழுத்தில் லேசான காயம் இருந்தது. இதையடுத்து அனுசுயா மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கணவரை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.

அனுசுயா போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கணவர் தினமும் குடித்து விட்டு வந்து சித்ரவதை செய்ததாகவும் இதனால் அவருடன் வாழ பிடிக்காமல் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த அவரது நண்பர் முரசொலி மாறனும் போலீசில் சிக்கினார். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசார் விசாரணையில்.... 

கணவர் சந்தேகத்தின் காரணமாக மன உளைச்சல் இருந்த அனுசுயா, கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்து உள்ளார். இதுபற்றி தனது ஊரைச் சேர்ந்த வாலிபர் முரசொலி மாறனிடம் தெரிவித்தார்.

இருவரும் சேர்ந்து சுரேசை கொலை செய்ய திட்டமிட்டனர். விழுப்புரத்தில் இருந்து முரசொலி மாறன் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

மாலையில் மருந்து கடையில் இருந்து பணி முடிந்து திரும்பிய அனுசுயா தூக்க மாத்திரைகளை எடுத்து வந்தார். இரவில் கணவர் சுரேசுக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை பொடி செய்து தோசை மாவில் கலந்தார்.

இந்த மாவை தோசை சுட்டு சுரேசுக்கு கொடுத்தார். இதனை சாப்பிட்ட அவர் சிறிது நேரத்திலேயே தூங்க சென்றார்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் முரசொலி மாறனை அனுசுயா வீட்டுக்குள் வர சொன்னார்.

படுக்கையில் மயக்க நிலையில் இருந்த சுரேசை இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். முரசொலி மாறன் இரண்டு கால்களையும் பிடித்துக் கொள்ள அனுசுயா துப்பாட்டாவால் கணவர் என்று பாராமல் கழுத்தை நெரித்து சுரேசை துடிக்க துடிக்க கொலை செய்தார்.

பிறகு முரசொலி மாறன் எதுவும் தெரியாதது போல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அனுசுயாவும் ஒன்றும் தெரியாதவரை போல் இரவு முழுவதும் வீட்டிலேயே தூங்கினார். காலையில் போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளார். போலீசாரிடம் கணவன் மது குடித்து இறந்ததாக நாடகமாடி உள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவந்து உள்ளது.

மேலும் செய்திகள்