தொழிற்சாலைகளில் மின்சார அளவை கணக்கிட நவீன கருவி தமிழ்நாடு மின்சார தொழிற்சாலைகளில் மின்சார அளவை கணக்கிட நவீன கருவி தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை

தொழிற்சாலைகளில் மின்சார அளவை கணக்கீடு செய்ய நவீன கருவிகளை பொருத்தும் பணியில் தமிழ்நாடு மின்சார வாரியம் இறங்கி உள்ளது.

Update: 2019-11-02 23:27 GMT
சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உயர்மின் அழுத்த இணைப்புகளை (ஹெச்.டி.சர்வீஸ்) கொண்டு உள்ள தொழிற்சாலைகள், மில்கள், பெரிய நிறுவனங்களுக்கு மின்சார வினியோகம் செய்து வருகிறது.

உயர்மின் அழுத்த இணைப்புகள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு உதவி செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று மின்கணக்கிடு செய்து வருகின்றனர். அதிக பணி சுமையில் சிக்கி தவிக்கும் உதவி செயற்பொறியாளர்களை விடுவிக்கவும், உயர்மின் அழுத்த இணைப்புகளில் தவறுகள் ஏற்படாதவாறு துல்லியமாக மின்சார அளவை கணக்கீடு செய்யவும் தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்தது.

சிம்கார்டுடன் கூடிய மோடம்

இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள உயர்மின் அழுத்த இணைப்புகளில் சிம்கார்டுடன் கூடிய மோடம் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு மாதம் பயன்படுத்தப்படும் மின்சார அளவு கணக்கிடப்பட்டு, சிம்கார்டு மூலம் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் சென்றுவிடும்.

இதனை பார்த்து அதிகாரிகள் மின்கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம். இந்த முறை தற்போது சோதனை அடிப்படையில் நடந்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் சிம்கார்டு செயல்படுவதற்கான டவர்கள் இல்லாததால், உயர்மின் அழுத்த இணைப்பு வாடிக்கையாளர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

90 சதவீத பணிகள் நிறைவு

இந்த திட்டம் குறித்து மின்சார வாரிய தலைமை அலுவலக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரையில் செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, ஈரோடு, காங்கேயம் போன்ற இடங்களில் தான் அதிகமான உயர்அழுத்த இணைப்புகளை பெற்றுள்ள வாடிக்கையாளர் கள் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை துல்லியமாக கணக்கீடு செய்வதற்காக, ஏற்கனவே பயன்படுத்தி வரும் மின்சார மீட்டர்கள் மாற்றப்பட்டு, நவீன மீட்டர்கள் பொருத் தப்பட்டு உள்ளன. அதன் அருகில் மோடம், சிம்கார்டு உள்ளிட்ட நவீன கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது மின்வாரிய ஊழியர்களின் வேலைப்பளு குறையும். தற்போது மாநிலம் முழுவதும் இந்த பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. டிசம்பர் 1-ந் தேதி அல்லது புத்தாண்டான ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.

தமிழகத்தில் முன்மாதிரி

கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி தரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த திட்டம் நாட்டிலேயே முன்மாதிரியாக தமிழகத்தில் தொடங்கப்பட்டு விரைவில் முழுமையாக நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வரும் காலங்களில் சிறிய தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்