10 போலி நிறுவனங்களின் ரூ.1,600 கோடி சொத்துகளை வருமானவரித்துறை முடக்கியது; சசிகலா குடும்பத்தின் பினாமியா?

வருமான வரித்துறை ரூ.1,600 கோடி மதிப்பிலான 10 நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது சசிகலாவின் பினாமி சொத்துகளா? என்று விசாரணை நடந்து வருகிறது.

Update: 2019-11-04 23:09 GMT
சென்னை,

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகள்அலுவலகங்கள் என 187 இடங்களில், கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 1,800 அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, 5 நாட்கள் நடத்திய சோதனையில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் சிக்கியது. அந்த ஆவணங்களை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்தனர்.

அப்போது சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி சுமார் ரூ.1,500 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கி சேர்த்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சசிகலா மற்றும் பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கிய அவருடைய குடும்பத்தினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வேளச்சேரியில் உள்ள திரையரங்க அதிபர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி வரவழைத்தனர்.

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு சசிகலா குடும்பத்தினர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்த தனித்தனி குழுக்கள் உருவாக்கப்பட்டு விசாரணை நடந்தது.

இந்தநிலையில் வருமானவரித்துறை ரூ.1,600 கோடி மதிப்பிலான 10 நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது சசிகலாவின் பினாமி சொத்து களா? என்ற அடிப்படையில் விசாரணையும் நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவல்களை சென்னையில் உள்ள வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்