புல் புல் புயலால் தமிழகத்துக்கு எந்த விதமான மழையும் இருக்காது - சென்னை வானிலை ஆய்வு மையம்

புல் புல் புயலால் தமிழகத்துக்கு எந்த விதமான மழையும் இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-06 13:45 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழையையொட்டி அரபிக்கடலில் உருவான கியார் புயல் 2 நாட்களுக்கு முன் ஏமனில் கரையை கடந்தது. அரபிக் கடலில் சுழலும் மற்றொரு புயலான மஹா இன்று குஜராத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு புதிய புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு புல் புல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் வழங்கியுள்ள பெயராகும்.

புல் புல் என்பது அரபி மொழியில் அழைக்கப்படும் ஒருவித பாடும் பறவை. புல் புல் புயல் படிப்படியாக வலுப்பெற்று வங்கக் கடலின் வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் வங்கதேசத்தை ஒட்டி கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும். இது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது. புயல் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்பாக இருக்கும். சூறாவளி காற்று வீசும்.

எனவே மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். புல் புல் புயலால் தமிழகத்துக்கு எந்த விதமான மழையும் இருக்காது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச் சேரியில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்