உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு சரத்குமார் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-10 23:45 GMT
சென்னை,

சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். அக்கட்சியின் துணை பொது செயலாளர் எம்.ஏ.சேவியர், மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நிர்வாகத்தை சீர்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. அயோத்தி வழக்கைப் பொறுத்தவரை அனைவரும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என்கிறார், ஆனால் அதை எதன் அடிப்படையில் சொல்கிறார் என்பதை அவர் தெளிவாக விளக்க வேண்டும். தமிழகத்தில் முதல்வருக்கான வெற்றிடம் இருக்கிறதா? இல்லை வேறு எதன் அடிப்படையில் ஆளுமைக்கு வெற்றிடம் என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 மாதம் கூட நிலைக்காது என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சியை வழி நடத்தி வருகிறார். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவோம். கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வை தேர்ந்தெடுத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் எங்கள் வெற்றி அமோகமாக உள்ளது.

தி.மு.க.வுடன் ஒருபோதும் இணைந்து செயல்பட மாட்டோம். தலைமையின் உத்தரவின் பேரில் கடந்த தேர்தல்களில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் எங்களது கட்சி எங்கே வலிமையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி அ.தி.மு.க.விடம் மேயர் பதவி கேட்க உள்ளோம். மேயர் பதவியை கேட்பது தவறல்ல. கேட்பது எங்கள் கடமை. அதை அவர்கள் பரிசீலனை செய்து முடிவு செய்யட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்