வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-12-15 15:28 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் பரவலாக பல 
மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:

தமிழகம் மற்றும் கேரள எல்லையையொட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை, திருச்சி, ஈரோடு, தூத்துக்குடி, தர்ம புரி, தஞ்சாவூர், கரூர், நீலகிரி, திருப்பூர், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருவள்ளூர், திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் நேற்றிரவு மழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகி வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து வருவதை பொறுத்து மழையின் அளவு அமையும்.

தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யுமா? அல்லது வட தமிழகம் வரை மழை இருக்குமா? என்பது 2 நாட்களில் தெரியவரும்.

பருவ மழை முடிய இன்னும் 15 நாட்கள்தான் உள்ளது.  எனவே சென்னையில் வழக்கமான மழையை விட குறைவாகவே மழை பெய்துள்ளதால் பற்றாக் குறையாகவே அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்