சென்னையில் குழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்தவர்கள் பட்டியல் ரெடி -கூடுதல் டி.ஜி.பி. ரவி

சென்னையில் குழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்தவர்கள் பட்டியல் தயாராகியுள்ளது என கூடுதல் டி.ஜி.பி. ரவி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-12-19 09:05 GMT
சென்னை

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் காவலன் ஆப் குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூடுதல் டி.ஜி.பி ரவி  காவலன் ஆப் குறித்த பல்வேறு விளக்கங்களை மாணவர்களுக்கு அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“காவலன் ஆப் சற்று கடினமாக இருப்பதால் ரெஜிஸ்டர் செய்வதில் பிரச்சினை என்று மக்கள் சொல்லியுள்ளனர். இன்னும் சில தினத்தில் காவலன் ஆப் மிக எளிமையாக இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிய வகையில் காவலன் செயலி மாற்றியமைக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஒரு குற்றமும் நடைபெறாத  போதே, ஜீரோ கிரைம் நிலை உருவாகும்.

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த 30 நபர்களின் பெயரை சென்னை காவல் துறைக்கு அனுப்பி வைத்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். படிக்கும் மாணவர்கள் ஆபாச படம் பார்க்காதீர்கள். உங்கள் கவனம் சிதறும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளில்  தீயவைகளுக்கு நாம் இரையாகி வருகிறோம்.

உங்களிடம் தவறாக நடந்துகொள்பவரை அடிக்கவும், உதைக்கவும் உங்களுக்கு சட்டத்தில் உரிமை உண்டு. உங்களை மானபங்கம் யாரேனும் செய்ய வந்தால் அவர்களை நீங்கள் சுட்டு கொன்றாலும் குற்றமாகாது. பெண்கள் மீதும் கை வைப்பதும் போலீஸ் மீது கை வைப்பதும் ஒன்று. அனைத்து பெண்களுக்கும் ஏ.டி.ஜி.பி. ரவி என்ற அண்ணன் இருக்கிறான் என்று சொல்லுங்கள். உங்கள் சகோதரன் காவல்துறை அதிகாரி என உங்களிடம் தவறாக  நடந்து கொள்பவரிடம் சொல்லுங்கள்.

பெண்கள் ஆடை மீது குறை சொல்லுபவன் தவறானவன். ஆடை என்பது அது அவர்கள் சுதந்திரம். தவறாக நடக்க முயன்ற எவனாக இருந்தாலும் அடியுங்கள்... உங்கள் பாதுகாப்பே முக்கியம்” என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்