இன்று வெளியாக இருந்த ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்த ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-30 22:30 GMT
சென்னை, 

நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாடோடிகள்-2’. இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், இந்த திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பிரவீண்குமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தயாரிப்பாளர் நந்தகோபால் எங்கள் நிறுவனத்தை தொடர்புகொண்டு நாடோடிகள்-2 படத்தை தயாரிக்க கடன் கேட்டார். இதனடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு மே 16-ந்தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதில், நாடோடிகள்-2 படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வினியோக உரிமையை 5 ஆண்டுகளுக்கு எங்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக 5 கோடியே 25 லட்சம் ரூபாய் திருப்பிக் கொடுக்கக்கூடிய வினியோக தொகையாக எங்கள் நிறுவனம் நந்தகோபாலுக்கு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதன்படி ரூ.3 கோடியே 50 லட்சத்தை நந்தகோபாலுக்கு ஏற்கனவே பல்வேறு தேதிகளில் வழங்கப்பட்டது. இறுதியாக ரூ.1.75 கோடி வழங்க தயாராக இருந்தோம். இந்தநிலையில், நாடோடிகள்-2 திரைப்படம் ஜனவரி 31-ந்தேதி (இன்று) வெளியாக உள்ளதாக பத்திரிகைகளில் கடந்த 26-ந்தேதி விளம்பரம் வெளியானது.

இதுகுறித்து நந்தகோபாலிடம் கேட்டபோது, அவர் படத்தை வெளியிடும் உரிமையை ‘லிங்கா பிக் பிக்சர்ஸ்’ நிறுவனத்துக்கு வழங்கிவிட்டதாக கூறினார்.

எனவே, ஒப்பந்தத்தை மீறி அவர் செயல்பட்டுள்ளார். எனவே, நாடோடிகள்-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். பின்னர், ‘நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட நிபந்தனைகளுடன் இடைக் கால தடை விதிக்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

அதேநேரம், மனுதாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டிய ரூ.1.75 கோடியை 2 வாரத்துக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்