நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றதாக தகவல் தெரிவிக்கின்றது.

Update: 2020-02-06 15:37 GMT
சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. சென்னையில் இருந்து நேற்று மதியம் 1.50 மணி அளவில் அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர், படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் சம்மன் கொடுத்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

பின்னர் விசாரணைக்காக சென்னைக்கு வருமாறு அவரை அழைத்தனர். அதற்கு அவர், இன்னும் சிறிது நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும், அதன்பிறகு தனது காரிலேயே சென்னை வருவதாகவும் கூறினார். அதை ஏற்க மறுத்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரை தங்கள் காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதனால் விஜய் நடிக்க இருந்த காட்சிகள் நிறுத்தப்பட்டு, மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 3-வது அவென்யூவில் நடிகர் விஜய்க்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டுக்கு நேற்று மாலை 4.30 மணியளவில் 6 வருமானவரித் துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்தனர். பண்ணை வீட்டுக்குள் சென்ற அவர்கள் அங்குள்ள அறைகளில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

நெய்வேலியில் இருந்து நடிகர் விஜய்யை வருமான வரி அதிகாரிகள் காரில் பண்ணை வீட்டுக்கு இரவு 8.45 மணிக்கு அழைத்து வந்தனர். கைப்பற்றிய சில ஆவணங்களை அவரிடம் காட்டி விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில்,  சென்னை அருகே பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. பிகில் படத்திற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் வீட்டில் நேற்று இரவு முதல் தொடங்கிய வருமானவரித்துறையின் சோதனை தற்போது நிறைவு பெற்றது. விஜய்யின் இல்லத்தில் சுமார் 23 மணி நேரத்திற்கு மேலாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விஜய் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமானவரித்துறையினர் வாக்குமூலம் பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  விஜய்யின் சொத்து விவரங்கள், முதலீடுகள் குறித்தும் வருமானவரித்துறையினர் ஆய்வு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்