பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் : மு.க ஸ்டாலின் அறிக்கை

சிஏஏவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப். 14 இரவை கருப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-15 04:51 GMT
சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, போலீசார் நேற்று தடியடி நடத்தினர்.   

இந்த நிலையில்,  போலீசார் தடியடி நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிப்ரவரி 14-ந்தேதி இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். அமைதியான போராட்டத்தை வன்முறை போராட்டமாக சித்தரிக்க காவல்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. ஜனநாயக போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தை அரசு கடைபிடிக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்