ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-28 16:21 GMT
சென்னை,

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம், இணையம், இணையம் புத்தன்துறை மற்றும் இதர மீனவ கிராமங்களை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் அங்கு இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக ஈரானில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் செய்தி மீனவ அமைப்புகள் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்