கோலாலம்பூரில் சிக்கி தவித்த 116 இந்தியர்கள் - சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை

கோலாலம்பூரில் சிக்கி தவித்த 116 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை தந்தனர்.

Update: 2020-03-24 05:20 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னைக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 18-ந் தேதி வந்த 116 இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். 

5 நாட்களாக உணவின்றி தவித்த அவர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் சிலர் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இருவரும்  மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து கோலாலம்பூரில் தவித்த116 பேரும் மலேசிய விமானம் மூலம் சென்னை வந்தனர். அந்த விமானம் சிறப்பு அனுமதியுடன் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக தாம்பரம் சிறப்பு மருத்துவமனைக்கு ராணுவ வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்