தமிழகம்-கேரளா பகுதியில் தகவல் சேவை மையம் திறப்பதை தடுப்பதா? - கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழகம்-கேரளா பகுதியில் தகவல் சேவை மையம் திறப்பதை தடுப்பதா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-06 21:00 GMT
சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கேரள மாநில எல்லைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. அங்கே தடுப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இரு மாநில மக்களிடையே எந்த தொடர்பும் இல்லாமல் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். இதனால் இரு மாநில மக்களும் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

இரு மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் உள்ள களியக்காவிளை பகுதியில் தகவல் சேவை மையத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எஸ்.ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் திறந்துவைத்தனர். இந்த மையத்தின் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்ல விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசும், கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர விரும்புபவர்களுக்கு கேரள அரசும் அனுமதி அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொடங்கப்பட்ட தகவல் சேவை மையம் செயல்படுத்துவதற்கு மக்கள் ஊரடங்கு இருக்கும் நேரத்தில் அனுமதிக்க முடியாது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் தடை உத்தரவை பிறப்பித்தனர். தகவல் சேவை மையம் செயல்பட கூடாது என்று கூறியதோடு சட்டமன்ற உறுப்பினர்களான திரு எஸ்.ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் சேவை மையத்தை திறப்பதை தடுப்பது அப்பட்டமான மக்கள் விரோத செயலாகும். இந்த செயலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்