தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் - அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் என்று அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Update: 2020-05-15 00:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதில் ஒரு நடவடிக்கையாக, கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழிமுறைகளை வகுத்தளிக்கவும், சர்வதேச அளவில் நிலவும் தடுப்பு முறைகளை கண்காணித்து, தமிழகத்தில் அவற்றை பயன்படுத்துவது பற்றிய வழிகாட்டியை தயார் செய்யவும் 19 டாக்டர்களைக் கொண்ட நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு தொடர்பாக அரசு என்ன செய்ய வேண்டும்? என்பதை பரிந்துரையாக அரசுக்கு இந்தக் குழு அளித்து வருகிறது.

இந்த நிலையில், ஜெனீவா, வேலூர், ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள மருத்துவ நிபுணர்கள், பொதுசுகாதார நிபுணர்களுடன் நேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிக தொற்று

அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். டாக்டர் பிரப்தீப் கவுர் மற்றும் டாக்டர் குகநாதன் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:-

முதல்-அமைச்சரிடம் மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்தினோம். ஜெனீவாவில் இருந்து உலக சுகாதார அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் சவுமியாவும் தனது பரிந்துரைகளை அளித்தார். நாங்களும் பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்து இருக்கிறோம்.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனைகளை தமிழகம்தான் மேற்கொண்டுள்ளது. இது சாதனையாகும். சில நாடுகளைவிட தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

சோதனைகளை அதிகரிக்கலாம்

இந்த பரிசோதனையை குறைக்கவே கூடாது, ஆனால் கூட்டலாம் என்று அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறோம். அதிக சோதனைகளினால்தான் தொற்று பரவலை கண்டறிய முடியும். தொற்று அதிகமாக இருப்பதினால் பயப்படக் கூடாது. ஆனால் எங்கே அதிகமாக இருக்கிறது என்பதை கவனித்து அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை சீக்கிரமாக கண்டறிந்துவிட்டால் சாவை தடுத்துவிடலாம். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

தடம் பார்த்து அறிதல்

அடுத்ததாக, தொற்றுக்கான தொடர்பை தடம் பார்த்து கண்டறியும் நடவடிக்கையாகும். ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார்? 15 நிமிடங்களுக்கும் மேலாக அவருடன் குறுகிய இடை வெளியில் இருந்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த நபர்களிடம் இந்தத் தகவலைச் சொல்லி, அவர் களை வெளியே போகாமல் இருக்கச் செய்ய வேண்டும். அறிகுறி வந்தால் உடனே பரிசோதனைக்கு வரச் சொல்ல வேண்டும். இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் முதலில் கொத்தாக ஏற்பட்ட தொற்றை சரியாக கையாண்டு வெற்றிகரமாக முடித்துவிட்டனர். 2-வது கொத்தாக ஏற்பட்டு வரும் தொற்றுகளிலும், தொடர்பை தடம் பார்த்து கண்டறியும் நடவடிக்கையை அரசு செம்மையாக செய்திருக்கிறது. அரசிடம் இருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், சராசரியாக 20 தொடர்புகளை தடம் கண்டறிகின்றனர். இந்த 20 பேரில் யாருக்கும் அறிகுறி இல்லை என்றாலும் அவர் வீட்டில்தான் 14 நாட்கள் வெளியே செல்லாமல் தனித்திருக்க வேண்டும்.

படிப்படியாக

சில நேரங்களில் தொற்று அதிக அளவில் அலையாக எழும், சில நேரங்கள் குறைவாக இருக்கும். அதிகம் பரவும் நேரங்களில் இந்த நடைமுறைகளை பின்பற்றினால் பரவலாகாமல் கட்டுப்படுத்திவிடலாம். அதிக தொற்று காணப்பட்டாலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

ஊரடங்கு இனி அடுத்த நிலைக்குச் செல்ல உள்ளது. கட்டுப்பாடுகளை சிறிது சிறிதாகத்தான் தளர்த்த முடியும். மற்ற இயல்பு நாட்களைப் போல மாற்ற முடியாது. அப்படி விட்டால் தொற்று அதிகரித்துவிடும். எனவே ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் என்று உணர்கிறோம்.

நூறு சதவீதம் முன்பு போலவே இருப்பதற்கு வாய்ப்பில்லை. தளர்வுகளை அறிவிக்கும்போது ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனையின்படிதான் அரசு செயல்படுகிறது என்று முதல்-அமைச்சர் குறிப்பிட்டது எங்களுக்கு திருப்தியாக இருந்தது.

விழிப்புணர்வு அவசியம்

ஊரடங்கு இருந்தாலும்கூட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். எங்கு சென்றாலும் கூட்டம் கூடாமல் பார்த்துக்கொள்வது மிகச் சிறந்தது. எங்கள் பரிந்துரைகளுக்கான உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்தார். ஊரடங்கு இருந்தால்தான் எச்சரிக்கை உணர்வு மக்களிடம் இருக்கும். வாழ்வாதாரத்துக்காக தளர்வுகளை யும் அரசு அனுமதித்திருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்