தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Update: 2020-06-30 01:51 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் குறித்து, மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர்.

மேலும், வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு நேரடியாக சாத்தான்குளம் செல்ல வேண்டும். அவர் அங்கு தங்கியிருந்து, போலீஸ் நிலையத்திலும், இறந்தவர்களின் உறவினர்களிடமும் நேரடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ பதிவுகளை செய்தும் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த 26-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.  இதற்கு மத்தியில் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைத்தது. 

இதற்கிடையே சாத்தான்குளத்தில் தங்கி, இந்த வழக்கு விசாரணைக்கான சாட்சியங்களின் சேகரிப்பில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் ஈடுபட்டு உள்ளார். அப்போது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அவர் சில ஆவணங்களை தருமாறு அங்குள்ள போலீசாரிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு போலீசார் தரமறுத்ததாகவும், அதுமட்டுமல்லாமல் மாஜிஸ்திரேட்டுவின் விசாரணையை தடுக்கும் வகையில் பேசியதாகவும், கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு உடனடியாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு இ-மெயில் மூலம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி நிர்வாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக நீதிபதிகளின் உத்தரவின் பேரில், அந்த புகார் கிரிமினல் அவமதிப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த கிரிமினல் அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் உடனடியாக நேற்று விசாரணைக்கு எடுத்தனர். விசாரணைக்கு பின்னர், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரையும் பணியிட மாற்றம் செய்தால் மட்டுமே இந்த வழக்கு விசாரணை எந்தவித தடையும் இல்லாமல் நடக்கும்.

எனவே அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவலர் மஹாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி  இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்