216-வது நினைவு நாளையொட்டி தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

216-வது நினைவு நாளையொட்டி தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

Update: 2020-08-02 19:29 GMT
சென்னை,

தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை பெருமைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அன்னாரது நினைவுதினம் ஆடி 18-ம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு நேற்று காலை 9 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து மலர்தூவியும், அன்னாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் மற்றும் பதிவு ஒன்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து தாய்நாட்டை காக்க தனது இறுதி மூச்சு வரை எதிர்த்து போராடி வீரமரணம் எய்திய வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில், அவருடைய தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்