சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி: கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

சுதந்திர தினத்தையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடி கம்பத்தில் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2020-08-15 22:15 GMT
சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 150 அடி உயர கொடி கம்பத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மாநில சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை கே.எஸ்.அழகிரி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, மகளிரணி தலைவி வக்கீல் சுதா, மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் நாஞ்சில் பிரசாத், சூளை ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் காந்தியடிகள் அகிம்சை போராட்டத்தை நடத்தினார். அதேபோல, மத்தியில் நடக்கும் ஆட்சிக்கு எதிராக ராகுல் அவதார புருஷராக போராடி வருகிறார். ராஜஸ்தானில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. பல வழிகளில் முயன்றது. எம்.எல்.ஏ.க்களை கடத்தி சென்றார்கள். ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பா.ஜ.க.வின் சதியை முறியடித்திருக்கிறார்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இந்த 2 ஆட்சிகளையும் அகற்றும் போராட்டம் தொடங்கி இருக்கிறது. லோக்சபா தேர்தலில், 39 இடங்களில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. என்னை பொறுத்தவரை, 40 இடங்களிலும் வெற்றி பெற்றதாகத்தான் நினைக்கிறேன். தேனியில் குளறுபடி செய்துவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் வக்கீல்கள் சங்கத்தின் நிறுவனர் வக்கீல் அணுகுண்டு ஆறுமுகம் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.

மேலும் செய்திகள்