இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை: கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடை வீதிகளில் நேற்று பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

Update: 2020-08-22 00:00 GMT
சென்னை,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று (சனிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகரை வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் உள்ள முக்கிய கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்தவகையில் புரசைவாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, தியாகராயநகர், பெரம்பூர் உள்பட நகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் அதிகளவு குவிந்திருந்ததை பார்க்க முடிந்தது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். எருக்கம்பூ மாலை, கலாக்காய், அருகம்புல், மாவிலை, சோளம், கம்பு, சந்தனம், மஞ்சள் மற்றும் தோரணம் உள்பட பூஜைக்குரிய பொருட்களையும் மக்கள் வாங்கிச்சென்றனர். குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கினர். ரூ.30 முதல் ரூ.500 வரையிலான விலையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

தங்களுக்கு பிடித்தமான விநாயகர் சிலைகளை தேர்வு செய்து மக்கள் வாங்கிச்சென்றனர். அதேவேளை விநாயகர் சிலைகள் மீது வைக்கப்படும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடை விற்பனையும் வெகுஜோராக நடந்தது. இந்த சிறிய குடைகள் ரூ.10 முதல் ரூ.50 வரை விற்பனையானது. இனிப்பகங்களிலும் ஓரளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. கரும்பு, வாழை இலை, மஞ்சள் குலைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மயிலாப்பூர் மாட வீதிகளில் மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மாட வீதிகளில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். குறிப்பாக மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் வாகனங்கள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதன் காரணமாக அந்த பகுதியில் கடை விரித்த வியாபாரிகள் வியாபாரம் இல்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மளிகை கடைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் இருந்ததை பார்க்க முடிந்தது.

அதேபோல சென்னையை அடுத்த திருமழிசை காய்கறி சந்தை, மாதவரம் பழச்சந்தை போன்ற இடங்களிலும் நேற்று அதிகாலை முதலே வியாபாரிகள் அதிக அளவு குவிந்து காய்கறி, பழங்களை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

மேலும் செய்திகள்