பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்

பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப் பதால், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-20 22:56 GMT
சென்னை,

பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப் பதால், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மட்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) செல்கிறார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்டம் வாரியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். இதுவரை, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று அவர் ஆய்வு நடத்தியுள்ளார்.

இந்தநிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும், 23-ந்தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கும் செல்ல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி வரும் 23-ந் தேதி (புதன்கிழமை) 7 மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று பேசுகிறார். இதனால்தான் அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டருடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மற்ற மாவட்ட பயணத் திட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்