கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை

கிராமங்களில் உள்ள ஊரக வேலை உறுதித்திட்டம் போல நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை அளித்தது.

Update: 2020-09-21 23:00 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக்குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது.

அந்த குழு தமிழகத்தில் உள்ள பொருளாதார நிலையை ஆய்ந்தறிந்து பரிந்துரைகளை தயார் செய்தது. அதை தலைமைச் செயலகத்தில் அறிக்கையாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று சி.ரங்கராஜன் வழங்கினார்.

பின்னர் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சி.ரங்கராஜன் அளித்த பேட்டி வருமாறு:-

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரிடம் இப்போதுதான் அறிக்கை அளித்திருக்கிறோம். அரசு அதை பரிசீலித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும். முக்கியமாக கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் தொடர்பான பணிகள் மந்தமடைந்துள்ளன.

இந்த ஊரடங்கில் இருந்து விடுபட்டால்தான் பொருளாதார வளர்ச்சி மேம்படும். தொற்று நோய் பரவாமல் இருக்க வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம். எவ்வளவு சீக்கிரம் இந்த ஊரடங்கில் இருந்து வெளிவருகிறோமோ அவ்வளவு தூரத்துக்கு பொருளாதாரத்துக்கு அது நல்லது.

அடுத்த ஆண்டில் (2021) தமிழகத்தில் என்ன வளர்ச்சி இருக்கும் என்பதை நாங்கள் கணித்திருக்கிறோம். ஒரு கணக்கின்படி பார்த்தால் வளர்ச்சி 1.71 சதவீதமாக இருக்கும். மற்றொரு கணக்குப்படி பார்த்தால் பொருளாதார சரிவு கொஞ்சம் இருக்கும் என்று தோன்றுகிறது. அது எந்த அளவு இருக்குமென்று இப்போது சொல்வது கடினம்.

ஆனால் சில அறிகுறிகள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி. வருவாய், பெட்ரோலுக்கான வரி, மின்சார பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், கொரோனா பரவலுக்கு முன்னிருந்த நிலையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். அதனால் அடுத்த 2 மாதங்களில் பழைய நிலைக்கு வரலாம் என்று தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் வரிகளை உயர்த்துவதற்கு ஏதாவது பரிந்துரை அளித்திருக்கிறீர்களா?

பதில்:- வரியை உயர்த்துவதற்கு இந்த ஆண்டில் எதுவும் செய்ய முடியாது. அதற்கு வழியில்லை. இந்த ஆண்டில் வரியை குறைக்க வேண்டும் என்றுதான் அனைவருமே கேட்கிறார்கள்.

ஆனால் மத்திய காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும்போது வரியையும், வரி விகிதத்தையும் மாற்ற வேண்டிய அவசியம் நேரிடும். அது இப்போது எழும் கேள்வி அல்ல.

கேள்வி:- வருவாய் அதிகரிப்பதற்கு என்னென்ன பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன?

பதில்:- எங்களது பரிந்துரைகளை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று, நிவாரணம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை பற்றிய பரிந்துரைகள். இது குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியது. உதாரணமாக அதிகபட்சம் நவம்பர் வரை கொடுக்க வேண்டிய அரிசியை மேலும் நீட்டித்து தர கூறியுள்ளோம்.

மற்றொரு முக்கிய பரிந்துரை, கிராமங்களில் உள்ள வேலை உத்தரவாத திட்டத்தைபோல நகர்ப்புறங்களிலும் ஏற்படுத்தலாம் என்பதாகும். அதுபற்றிய விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறோம். அதை அரசு பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்.

பொருளாதார வளர்ச்சிக்காக நீண்டகால அளவில், இன்னும் பல ஆண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பரிந்துரையின் இரண்டாவது பகுதி.

கேள்வி:- மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியதுபோல, நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக ஏதாவது பரிந்துரைகள் அளிக்கப்பட்டு இருக்கிறதா?

பதில்:- அதுபற்றியும் கூறியிருக்கிறோம். ஆனால் அதை அரசு தான் தெரிவிக்க வேண்டும்.

கேள்வி:- தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை பலர் இழந்திருக்கிறார்கள். அதை போக்க ஏதாவது கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதா?

பதில்:- கிராமப்புறங்களில் வேலை உத்தரவாத திட்டம் இருப்பதை போல நகரங்களிலும் வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். கட்டுமான தொழிலாளர்களுக்கான நிதியில் உள்ள ரூ.3,200 கோடியை உடனடியாக செலவழிக்கும்படி கூறியிருக்கிறோம். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வரை வழக்கு சென்றது. அதில் சில உத்தரவுகள் உள்ளன.

அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு அந்த தொகையை எவ்வளவு சீக்கிரம் செலவழிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செலவழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறோம்.

கேள்வி:- தமிழக அரசின் கடன் சுமை எந்த அளவில் இருக்கும்?

பதில்:- இந்த ஆண்டில் கடன் சுமை ஏறத்தான் செய்யும். ஏனென்றால், அரசுக்கு வரவேண்டிய வருமானம் குறைந்து போய்விட்டது. ஆனால் மருந்துச்செலவு, சுகாதாரச்செலவு போன்றவை உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு சுகாதாரம் தொடர்பான செலவை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு கூறியிருக்கிறோம்.

எங்கள் கணக்குப்படி இதற்கு இன்னும் ரூ.5 ஆயிரம் கோடி செலவழிக்க வேண்டியிருக்கும். அதனால் இந்த ஆண்டில் வருமானம் குறையும், செலவு அதிகமாகும். எனவே அரசுக்கு நிதிப் பற்றாக்குறை அதிகமாகத்தான் இருக்கும்.

கேள்வி:- தனிநபர் வருமானத்தை பெருக்க என்ன வழி உள்ளது?

பதில்:- பட்ஜெட்டில் இருப்பதைவிட மூலதனச்செலவை ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் செலவழிக்கும்படி பரிந்துரைத்துள்ளோம். ஏற்கனவே கூறிய ரூ.3,200 கோடி, ரூ.10 ஆயிரம் கோடி ஆகியவற்றை அரசு செலவு செய்தால், அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதுதான் பொருளாதாரத்தின் இலக்கணம். அதாவது, எப்போதெல்லாம் தேவை (டிமாண்ட்) குறைவாக இருக்கிறதோ, அப்போது அரசு செலவுகளை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலதனத்தை ஆயிரம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரையில் கூறியிருக்கிறோம். அப்படி கொடுத்தால், தொழில் வளர்ச்சிக்கு நீண்ட கால நிதி உதவியை அந்த கழகம் வழங்க முடியும். இது மிக முக்கியம்.

தொழில் பூங்காக்கள், தொழில் நகரங்களை உருவாக்கி அதில் ஒரு பங்கை சிறு தொழில்களுக்கு வழங்க வேண்டும். சிறு தொழில்களுக்கு மாநில அளவில் கடன் உத்தரவாத திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

மேலும் செய்திகள்