அரசு எடுத்த நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - கவர்னர் பாராட்டு

அரசு எடுத்த நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-28 18:26 GMT
சென்னை,

பாரதீய வித்யா பவன் ஆண்டுதோறும் கலாசார விழாவினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கலாசார விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரம் வளாகத்தில் இன்று தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கலாசார விழாவினை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாம் நம்முடைய நாகரிகத்தின் சிறப்பான கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். இந்த வகையான நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார விழாக்கள் நம்முடைய வளமான கலை வடிவங்களில் இளைஞர்களிடம் ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, மீண்டும் வளர்ப்பதாகவும் அமையும். கொரோனா தொற்று இன்னும் விடைபெறவில்லை. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசு கூறியுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதநேயம் மற்றும் இந்தியா வெற்றி பெறும். கொரோனாவுக்கு எதிரான போரை முன்னின்று நடத்துவதில், தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன், பாரதீய வித்யா பவன் சென்னை கேந்திரத்தின் தலைவர் என்.ரவி, துணை தலைவர் நல்லி குப்புசாமி செட்டி, இயக்குனர் கே.என்.ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்