வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
வயலில் கரகாட்டம் ஆடியபடி மாற்றுத்திறனாளி மாணவி நாற்று நட்டார்;
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன். அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி மாலா. இவர் காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் கிருஷ்ணவேணி(வயது 15). பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள காது கேளாதோருக்கான தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விவசாயத்தை காக்க வேண்டும், பாரம்பரிய கலைகளை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி நேற்று நாற்றுகளை நட்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் கரகாட்டம் ஆடிக்கொண்டே நடவு செய்ததை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, மாணவியை பாராட்டினர். இது குறித்து மாணவியின் தாய் மாலா கூறுகையில், விவசாயம், கரகாட்டம் உள்ளிட்டவற்றை பேணிக்காத்து, கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 நாட்களாக வயலில் இறங்கி இந்த பயிற்சியினை கிருஷ்ணவேணி மேற்கொண்டுள்ளார். மேலும், இந்தியா புக்ஆப் ரெக்கார்டில் இடம்பெறவும் இந்த சாதனை முயற்சி செய்துள்ளோம், என்றார்.