பிரதமர் மோடி தமிழ் மொழியை கொண்டாடுகிறார்: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
தேசிய ஒருங்கிணைப்பின் அடையாளமாக தமிழ் மொழி மாறி வருகிறது என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.;
மதுரை,
காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) ராமேசுவரத்தில் நடைபெற உள்ளது. இதில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்கிறார். இதற்காக நேற்று மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி. இந்திய கலாசாரத்தின் தொன்மையான மொழி. வட இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்தில் இருந்து நிறைய ஆசிரியர்கள், வட இந்தியாவிற்கு சென்று தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இதன்மூலம், தேசிய ஒருங்கிணைப்பின் சிறந்த அடையாளமாக தமிழ் மொழி மாறி வருகிறது. பிரதமர் மோடி தமிழ் மொழியை கொண்டாடுகிறார். நல்ல கருத்துகளை திருக்குறள் வழியாக திருவள்ளுவர் எடுத்துச்சொல்லி இருக்கிறார். அனைவருக்கும் இது பெருமையானது. ஆனால் சிலர் இதில் அரசியல் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.