தமிழக கடன் நிலை குறித்து பிரவீன் சக்கரவர்த்தி கருத்து: அணி மாறுகிறதா காங்கிரஸ்...?
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறுகிறதோ? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.;
சென்னை,
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. ஆனால், இந்த முறை திடீரென 'ஆட்சியில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வருகிறது. இதற்கிடையே, தவெக தலைவர் விஜய்யுடன் ராகுல்காந்தி போனில் பேசியதும், அவருடைய ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சென்று சந்தித்து பேசியதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறுகிறதோ? என்ற கேள்வியையும் எழுப்பியது. ஆனால், இதை மறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'தமிழகத்தில் இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது' என்று தெரிவித்தார். தற்போது, பிரவீன் சக்கரவர்த்தி அடுத்த குண்டை தூக்கி வீசியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டின் கடன் நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவு திமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவில், "தமிழ்நாடு தற்போது இந்திய மாநிலங்களிலேயே அதிக நிலுவை கடன் கொண்ட மாநிலமாக உள்ளது. 2010-ம் ஆண்டு, உத்தரப்பிரதேசம் தமிழ்நாட்டை விட இரட்டிப்பு அளவுக்கு அதிக கடன் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த நிலை முழுமையாக மாறியுள்ளது.
இப்போது தமிழ்நாட்டின் கடன், உத்தரப்பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது. வட்டி சுமை சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. மேலும், கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை விட உயர்ந்து இருக்கிறது. இது தீவிர கவலைக்குரிய நிலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சி ஆட்சியை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் விமர்சித்து இருப்பது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இது பிரவீன் சக்கரவர்த்தியின் சொந்தக் கருத்து என்றும், காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் திமுக தலைமை காங்கிரஸ் தலைவர்களிடம் 'ஆட்சியில் பங்குதர முடியாது' என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. அதன் பிறகே, பிரவீன் சக்கரவர்த்தியின் தமிழக கடன் நிலை குறித்த பதிவு வெளிவந்ததாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் புகைச்சல் ஏற்பட தொடங்கிவிட்டது. இதை திமுக சரிசெய்யுமா?, அல்லது 'போனால் போகட்டும்' என்று விட்டுவிடுமா? என்பது போக போகத்தான் தெரியும்.