கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் - இரவிலும் நீடித்ததால் பரபரப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் இரவிலும் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-23 06:07 GMT
நாகர்கோவில், 

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடையை பணியாளருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் என வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று மாநிலம் தழுவிய அளவில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்பு போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சரஸ்வதி தலைமை தாங்கினார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன் தொடங்கி வைத்தார். அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயலட்சுமி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் இந்திரா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் லீடன் ஸ்டோன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் சந்திரகலா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலெக்டர் அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் குடைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தனர். காலையில் தொடங்கிய போராட்டம் இரவிலும் நீடித்தது. அங்கு அனைவரும் படுத்துக் கொண்டபடி அங்கன்வாடி பணியாளர்கள் களத்தில் இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்