பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன்: சசிகலா

தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-25 00:23 GMT

ஜெயலலிதா படத்துக்கு மரியாதை

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை ஆனார். சென்னை வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சசிகலா தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உடன் இருந்தார்.

இலக்கு

அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு சசிகலா இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது:-

நான் கொரோனாவில் இருந்தபோது தமிழக மக்கள், தொண்டர்களின் வேண்டுதலால் நலம் பெற்று திரும்பியிருக்கிறேன்.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். நம்முடைய இயக்கம் நூறாண்டை கடந்தும் நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறி சென்றுள்ளார். அதை மனதில் நிறுத்தி, வெற்றிக்காக பாடுபட வேண்டும். இது தான் நம்முடைய இலக்கு.

மக்களை சந்திப்பேன்

தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.. விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க நான் வருவேன். வரும் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா கூறியபடி வெற்றி கனியை பறிக்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

சரத்குமார்-சீமான் சந்திப்பு

இதற்கிடையே சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து பேசினர்.

சசிகலாவை சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து சரத்குமார் கூறியதாவது:-

சசிகலாவின் உடல் நிலை விசாரிக்க வந்தேன். 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை சந்திக்கும்போதெல்லாம் சசிகலா உடன் இருந்திருக்கிறார். நன்றி மறப்பது நன்றன்று என்ற குறளுக்கு ஏற்ப, நாட்கள் பயணித்த காலங்களை நினைவு கூறி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். மீண்டும் அவர் மக்கள் சேவை ஆற்ற வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமாரும், சசிகலாவை சந்தித்து பேசியிருப்பது பல்வேறு யுகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

அ.ம.மு.க. பொதுக்குழு

டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை குறிப்பிட்டு தான் சசிகலா பேசியிருக்கிறார். உண்மையான தொண்டர்கள் யார் என்பது அவரவருக்கு தெரியும். அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை (இன்று) நடக்க இருக்கிறது.இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். எங்கள் தலைமையில் 3-வது அணி அமையும், அது முதலாவது அணியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்