கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது மகனை கொலை செய்த பெண்ணுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2021-03-31 23:20 GMT
கிருஷ்ணகிரி, 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சிவானந்தம். ராணுவ வீரர். இவரது மனைவி வனிதா (வயது 29). இவர்களது மகன் நந்தீஸ்குமார் (4). இந்த நிலையில் வனிதாவுக்கும், அதே ஊரை சேர்ந்த கார் டிரைவரான கார்த்திக்ராஜா என்கிற சிவகார்த்திக் (28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறுவனுடன் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்களது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததாக நந்தீஸ்குமாரை, வனிதாவும், கார்த்திக்ராஜாவும் அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி நந்தீஸ்குமாரை அவர்கள் 2 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவனை தூக்கி கொண்டு ஊருக்கு சென்று வருகிறோம் என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு கிருஷ்ணகிரி வந்தனர். வரும் வழியிலேயே நந்தீஸ்குமார் இறந்து விட்டான்.

புதைத்து விட்டு சென்றனர்

இதையடுத்து கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள மலையடிவாரத்திற்கு சிறுவன் நந்தீஸ்குமாரின் பிணத்தை எடுத்து சென்று வனிதாவும், சிவகார்த்திக்கும் புதைத்துவிட்டு, மீண்டும் திருப்பதிக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் வீட்டின் உரிமையாளர், எங்கே குழந்தை? என கேட்டுள் ளார். அதற்கு உடல் நிலை சரியில்லாததால் ஊரிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து திருப்பதி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை அடித்து கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திருப்பதி போலீசார் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து சிறுவன் நந்தீஸ்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பார்த்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்ராஜா மற்றும் வனிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

17 ஆண்டுகள் சிறை தண்டனை

பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். அவ்வாறு வந்த கார்த்திக்ராஜா தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி கலைமதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை அடித்துக்கொலை செய்த வனிதாவுக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்