சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்; 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை; மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-11 02:04 GMT

10 லட்சம் பேர்

சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடு, வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பார்வையிட்டார்.

 இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்படும்போது, ஆஸ்பத்திரிக்கு சென்று தொடக்கத்திலேயே பரிசோதனை செய்துக்கொண்டால் உயிரிழப்புகளை தடுப்பதோடு மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதையும் தவிர்க்க முடியும். சென்னையில் தடுப்பூசி செலுத்த வேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தால் 10 நாட்களில் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்திவிட முடியும். எனவே முடிந்தவரை 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.

நெருக்கடியான காலம்

சென்னையில் ஒரே பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தால், குறைந்தது 50 பேர் மாநகராட்சி அலுவலர்களை அணுகினால், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தடுப்பூசி முகாம்கள் ஒருங்கிணைக்கப்படும். வீடுகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வருபவர்களிடம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும். கொரோனா விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிப்பது வருவாய்க்காக இல்லை. மக்களிடையே கட்டுப்பாடு கொண்டு வரவே இந்த அபராத நடவடிக்கைகள். அதேபோல் கொரோனா நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டதால் அதனை முழுமையாக முடக்க முடியாது.

அதிக கூட்டம்

கோயம்பேடு உள்ளிட்ட 80 மார்க்கெட்டுகள் சென்னையில் உள்ளன. அதிலும், குறிப்பாக காசிமேடு மீன் மார்க்கெட்டில் விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் கூடுகிறது. எனவே அந்த பகுதி தான் மிகவும் சவாலாக இருக்கிறது. மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த பகுதியில் கூட்டம் குறைக்க முடிவெடுக்கப்படும்.மேலும், மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் இதர இடங்களில் கட்டுப்பாடு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

அபராதம்

இதற்கிடையே நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கனி வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் அதனை விற்பனை செய்வதற்காக கொண்டு வரும் வியாபாரிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து வாகனங்களை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும் முககவசம் அணியாத வியாபாரி உள்ளிட்டவர்களுக்கு மாநகராட்சியினர் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்