விவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும் - ஹர்பஜன் சிங்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-17 13:17 GMT
சென்னை

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59. மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தினர். 

இதைத் தொடர்ந்து இன்று சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம். பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும்”

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்