மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்த மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்த மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2021-05-06 23:08 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், தேனிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). அரிசி கடை நடத்தி வந்தார். இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 10 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு 7 பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மூன்றாவது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். இதில் மூன்றாவது மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக முருகேசனிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார்.

இந்தநிலையில் முருகேசன், கடந்த 2019-ம் ஆண்டு, இரண்டாவது மனைவியின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் உன் தாயை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். தந்தையின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தன் தாயிடம் தெரிவித்தார். இதனால் சிறுமியின் தாயும், முதல் மனைவியும் முருகேசனை கண்டித்துள்ளனர்.

வெட்டிக்கொலை

இதனால், ஆத்திரத்தில் இருந்த முருகேசன் இரண்டாவது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி இரண்டாவது மனைவி காட்டிற்கு ஆடு மேய்க்க சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற முருகேசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுகுறித்த புகாரின்பேரில் கணேஷ் நகர் போலீசார் முருகேசனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தூக்குதண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகேசன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மதியம் நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பு கூறினார். அப்போது, குற்றவாளி முருகேசனுக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்