திருடப்பட்ட சிலைகள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் பா.ஜ.க. கோரிக்கை

அர்ச்சகர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயம் திருடப்பட்ட சிலைகள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் பா.ஜ.க. கோரிக்கை.

Update: 2021-06-10 19:56 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு கோவில்கள் மற்றும் புராதான சின்னங்கள் பாதுகாக்க அதிரடி உத்தரவுகளை வழங்கி உள்ளதை பா.ஜ.க. பெரிதும் வரவேற்று பாராட்டுகிறது. கோவில் நிதியை, முதலில் கோவில் பராமரிப்பு, விழாக்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள் என ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

தானம் வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக, இந்த நிலங்களை விற்கவோ, கொடுக்கவோ கூடாது. கோவில் வசம் தான் இந்த நிலங்கள் எப்போதும் இருக்க வேண்டும். கோவில் நிலங்களைப் பொருத்தவரை பொது நோக்கம் என்ற அம்சத்தை எடுத்து வரக்கூடாது என தெளிவாக அறிவுறுத்தியதன் காரணமாக கோவில் நிலங்களை சூறையாடுவது தவிர்க்கப்படும். குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை ஆறு வாரங்களில் தயாரித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவர்களை வெளியேற்றவும், பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்களில் உள்ள சிலைகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை புகைப்படங்கள் எடுக்க வேண்டும். திருடப்பட்ட சிலைகள் பொருட்களின் விவரங்களை இணைய தளங்களில் வெளியிட வேண்டும். அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட கோவில் ஊழியர்களை அனைவருக்குமான ஊதியத்தை குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயிக்க வேண்டும். அது அரசு ஊழியருக்கு இணையாக இருக்க வேண்டும். இந்த திருப்புமுனை தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்தையும் அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்