இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் வந்து மதுரையில் பதுங்கிய 23 அகதிகள் கைது போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவரும் சிக்கினார்

கள்ளத்தோணியில் இலங்கையில் இருந்து வந்து மதுரையில் பதுங்கிய 23 அகதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவரும் சிக்கினார்.

Update: 2021-06-11 22:53 GMT
மதுரை,

இலங்கையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த ஆவணங்களும் இன்றி 23 பேர் கள்ளத்தோணி மூலம் தூத்துக்குடி வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மதுரை கப்பலூர் பகுதிக்கு வந்தனர்.

அவர்களை மதுரை கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் சந்தித்து, 23 பேரையும் தங்கள் பகுதியில் யாருக்கும் தெரியாமல் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக ஏஜெண்டு ஒருவர் மூலம் கப்பலூர் பகுதியில் செயல்படாமல் கிடக்கும் தொழிற்சாலையில் அவர்களை தங்க வைத்தனர். பின்னர் மதுரையில் சில இடங்களில் வேலைக்கும் சேர்த்துவிட்டனர்.

24 பேர் சிக்கினர்

இதற்கிடையே போலியான ஆவணங்கள் தயாரித்ததாக கப்பலூர் பகுதியை சேர்ந்த காசிவிசுவநாதன் என்பவரை மதுரை புறநகர் கியூ பிரிவு போலீசார் கடந்த வாரம் பிடித்து விசாரித்தனர். அவர்தான் போலீசாரிடம், இலங்கையில் இருந்து திருட்டுத்தனமாக 23 பேர் மதுரை வந்து பதுங்கி இருப்பதாகவும், இங்கிருந்து அவர்கள் கேரளா வழியாக கள்ளத்தோணி மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கப்பலூர் தொழிற்சாலை பகுதியில் இருந்த 23 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களை விசாரித்த போது, இலங்கையை சேர்ந்த திருமுருகன், எலக்சன், சுகந்தன், ஸ்ரீகாந்தன், கபலன், தினேஷ் உள்ளிட்ட 23 பேர் என்பது உறுதிசெய்யப்பட்டது.

அதை தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 23 பேரையும், அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்த காசிவிசுவநாதனையும் கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

அவர்கள் அனைவரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் 24 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, “இலங்கை நாட்டை சேர்ந்தவர்களுக்கு கனடா செல்ல அனுமதியில்லை. எனவே அவர்கள் தமிழகம் வந்து இங்குள்ள ஆவணங்கள் மூலம் வேறு நாட்டுக்கு சென்று அங்கிருந்து, கனடா செல்வதற்காக பதுங்கி இருந்தது தெரியவந்திருக்கிறது” என்று கூறினர்.

3 பேருக்கு வலைவீச்சு

மதுரையில் பிடிபட்ட இலங்கையை சேர்ந்தவர்களுக்கு மதுரை கூடல்நகர் ரெயிலார் நகரை சேர்ந்த தினகரன் மற்றும் அவரது மகன் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் உதவி செய்துள்ளனர். தற்போது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதில் தினகரன் என்பவர் இலங்கை தாதா அங்கொடாலொக்கா உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வக்கீல் சிவகாமிசுந்தரியின் தந்தை ஆவார். தலைமறைவான 3 பேரையும் கியூ பிரிவு போலீசார் தேடி வருகிறார்கள்.

மங்களூருவில் 40 பேர் கைது

இதற்கிடையில் மதுரையில் கைது செய்தது போன்று, கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் இலங்கை தமிழர்கள் 40 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்