கொரோனாவால் பெற்றோர் மரணம்: நிவாரணம் பெற தகுதியுள்ள குழந்தைகளை தேர்வு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நலத்திட்டத்தின் நிவாரணங்களை பெற தகுதியுள்ள குழந்தைகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-13 02:59 GMT
சென்னை, 

கொரோனா தொற்றால் பெற்றோர் மரணமடையும் நிலையில், அரசு அறிவித்துள்ள நலத்திட்டத்தின் நிவாரணங்களை பெற தகுதியுள்ள குழந்தைகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநலத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள், இருவரில் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நல உதவிகளை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அவர்கள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டு, 18 வயதை அடைந்ததும் வட்டியுடன் அந்த தொகை வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.

மேலும், அரசு விடுதிகளில் சேர்வது, கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட பட்டப்படிப்பு செலவுகளை அரசே ஏற்பது உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் அதில் அடங்கும்.

முதல்-அமைச்சர் அறிவித்துள்ள இந்த நல உதவிகள் அனைத்தும் சம்பந்தப்பட்டவரை சரியாக சென்றடைவதற்கான வழிகாட்டு கொள்கைகளை உருவாக்குவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த குழு 7-ந் தேதி கூடி ஆலோசித்து, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டிகளை உருவாக்கியுள்ளது. மேலும், சமூக பாதுகாப்பு ஆணையர், இந்த திட்டத்திற்கான உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கான உத்தரவு ஆகியவற்றை வழங்கக்கோரி அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதன்படி, முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதற்கான வழிகாட்டிகளுக்கு ஒப்புதல் தந்து அரசு உத்தரவு பிறப்பிக்கிறது. அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையிலான பணிக்குழு, அந்தந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட (பெற்றோரை இழந்த) குழந்தையின் குடும்பத்தை கண்டறிய வேண்டும்.

இதற்காக கொரோனா சாவு தொடர்பான தரவுகளை பயன்படுத்தி கொள்ளலாம். கிராம நிர்வாக அதிகாரிகள், பேரூராட்சி செயல் அதிகாரிகள், நகராட்சி ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர்களிடம் இருந்தும் தரவுகளை பெறலாம்.

பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளில் உள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று நேரடி சரிபார்த்தலை மாவட்ட பணிக்குழு கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தகவல்களை உறுதி செய்ய வேண்டும்.

சிலர் கொரோனா தொற்றினால் வீட்டிலேயே மரணம் அடைந்திருப்பார்கள். அவர்கள் கொரோனா தொற்றை காரணம் காட்டி இறப்பு சான்றிதழ் பெற்றிருக்க மாட்டார்கள்.

அதுபோன்ற நிகழ்வுகளில் குழந்தையின் தாயோ அல்லது தந்தையோ, இருவரும் இறந்திருந்தால் குழந்தையின் பாதுகாவலர் யாராவது மருத்துவச் சான்று அளித்து இறப்பு சான்றிதழ் கோரலாம். இதற்காக மருத்துவ அதிகாரியின் மருந்துச்சீட்டு, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை, சி.டி.ஸ்கேன் அறிக்கை, எக்ஸ்ரே அறிக்கை போன்றவற்றை அளித்து, கொரோனா தொற்றினால்தான் சாவு நேரிட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்.

தாய், தந்தையில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்திருந்தால் அந்த குழந்தையை குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அந்த குழந்தையின் வயது 18-க்கு கீழாக இருக்க வேண்டும்.

இரண்டு பெற்றோருமே இறந்திருந்தால், அவர்கள் மூலம் ஆண்டு வருமானம் எவ்வளவு வந்தது என்பதை கணக்கிட தேவையில்லை. பெற்றோரில் யாராவது ஒருவர் இறந்து, அவர்தான் அந்த குடும்பத்தின் வருமானத்தை ஈட்டி வந்தவராக இருந்தால், அவரது வருமான சான்றிதழை கோராமல், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் பட்டியலில் அவரது குடும்பம் இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

பட்டியலில் பெயர் இல்லை என்றால், அந்த குடும்பத்தை பட்டியலில் சேர்ப்பதற்கான தகுதி உள்ளதா? என்பதை ஆராய வேண்டும். கொரோனா தொற்றினால் இறந்தவர் அல்லது இருவருமே அரசுப்பணி அல்லது அரசு உதவி பெறும் நிறுவனம் அல்லது பொதுத்துறை நிறுவனம் ஆகிய ஏதாவது ஒன்றில் பணியாற்றி இருந்தால் இந்த திட்டம் அவர்களுக்கு பொருந்தாது.

பயனாளிகளை அங்கீகரிக்கும் அதிகாரம், சமூக பாதுகாப்பு ஆணையருக்கு அளிக்கப்படுகிறது. பயனாளிகளின் விவரங்களுடன் மாவட்ட கலெக்டர் பரிந்துரை கடிதத்தை ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.

ஒருவேளை தாய், தந்தை 2 பேரையுமே இழந்த குழந்தை, விடுதிகள், அரசு விடுதிகள், குழந்தைகள் நலன் நிறுவனங்களில் தங்கிப்படிக்க விரும்பாமல், உறவினர், பாதுகாவலர் வீட்டில் தங்கி இருந்தாலும் ரூ.3 ஆயிரம் பராமரிப்பு தொகையை அந்த குழந்தை 18 வயது அடையும் வரை வழங்க வேண்டும்.

அந்த குழந்தை படித்த அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார். தனியார் பள்ளியில் படித்தால், அங்கும் தொடர்ந்து படிக்க அனுமதி வழங்கப்படும். ஆர்.டி.இ. விதிமுறைகளின்படி பள்ளி கட்டணம் செலுத்தப்படும். சீருடை, புத்தகம், நோட்டு ஆகியவற்றுக்கான செலவும் மாநில அல்லது பிரதமர் நிதியில் இருந்து வழங்கப்படும்.

இளங்கலை பட்டப்படிப்பு வரை மாநில அரசு, அந்த குழந்தையின் படிப்பு செலவை ஏற்கும். இலவச கல்வியை அந்த குழந்தை விரும்பாவிட்டால், இளங்கலை பட்டப்படிப்பிற்கான கல்வி கடன் பெறுவதற்கு அரசு உதவி செய்யும். அந்த கல்வி கடனுக்கான வட்டியை அரசே செலுத்தும்.

அரசு விடுதிகளில் சேர விரும்பினால் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்படுவார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்கான குழு, மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்படுகிறது. அதில் கல்வி, சமூக நலன் அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர் சேர்க்கப்படுவதையும், அந்த குழந்தைக்கு நிவாரணம் சரியான முறையில் சென்று சேர்வதையும், தடையின்றி குழந்தை கல்வி கற்பதையும், உதவி நிதி அளிக்கப்படுவதையும் இந்த குழு கண்காணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்