போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டில் முன் ஜாமின் மறுப்பு

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் தனுஜாவுக்கு முன் ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-06-18 11:05 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே செல்வோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வந்தனர். அந்த வகையில் கடந்த 6 ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினரிடம், பெண் வழக்கறிஞர் தனுஜா, பயிற்சி வழக்கறிஞராக இருக்கும் தனது மகளுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு காவல்துறை சார்பாக பெண் வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகள் ப்ரீத்தி ஆகிய இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தாய் தனுஜா, மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அங்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி, மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, “வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அவர் மகள் பிரீத்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி, தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்