சென்னையில் குறையும் கொரோனா பரவல்: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா நகரம்

குறைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா நகரமாக சென்னை மாறியுள்ளது.

Update: 2021-07-04 11:29 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையிலும் பாதிப்பு படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது. சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 2,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 5,33,224 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 8,217 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,22,561 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே குறிப்பிட்ட ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்ட பேருக்கு தொற்று உறுதியானால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எந்த ஒரு பகுதியிலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இல்லாததால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமாக சென்னை மாநகராட்சி மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 132 இடங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளதாகவும் ஒவ்வொரு இடத்திலும் ஐந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தொற்று உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிப்புகள் உள்ள குறிப்பிட்ட இடங்களில் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு தளர்வுகளில் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்