தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும் - டிடிவி தினகரன் டுவீட்

தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-11 07:56 GMT
சென்னை,

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் 'கொங்கு நாடு' குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை  தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது  தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப்  போல பிரித்தாளும் சூழ்ச்சியைக்  கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்