அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டண வசூலா? ஆய்வு நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பள்ளி கூடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் புகாரை தொடர்ந்து, ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-07-17 12:14 GMT

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு, தனியார் உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன.  எனினும், ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ள முரளிதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 வசூல் செய்யப்படுகிறது.

பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணமான ரூ.50 தவிர கூடுதல் தொகையை மாணவர்களிடம் வசூலிக்க கூடாது என கடந்த ஜூன் 18ந்தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மீறி, பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.100 வசூலிக்கிறார்.

கட்டணம் செலுத்த முடியமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால், இதுகுறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கூடுதல் விண்ணப்ப கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்த தலைமை ஆசிரியையை பணி நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்ணயித்த கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி துறை ஆணையர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு கொண்ட நீதிபதி, அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.  மேலும் கூடுதலாக கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்