தவெக கூட்டணிக்கு விசிக வருமா? செங்கோட்டையன் பதில்
எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைத்தாலும் ஓபிஎஸ் அதிமுகவிற்கு செல்ல மாட்டார் என்று செங்கோட்டையன் கூறினார்.;
சென்னை,
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் தவெக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார் தவெகவிற்கு வருகிறார்கள் என்பதை இப்போது கூற இயலாது. வெளிப்படையாக கூறினால் அங்கே பிடித்து வைத்துக்கொள்வார்கள். பொங்கலுக்குள் அவர்களை தவெகவில் இணைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் தெளிவாக இருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைத்தாலும் ஓபிஎஸ் அதிமுகவிற்கு செல்ல மாட்டார். ஆனால் அழைக்க வாய்ப்பில்லை, இதனை மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி. டிடிவி, ஓபிஎஸ் தவெக கூட்டணியில் இணைவது விரைவில் நடைபெறும். திமுக கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. விசிக தவெக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ, அக்கட்சியின் தொண்டர்கள் அத்தனை பேரும் இங்கு தவெகவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.