அரசியல் தலையீடுகள் இன்றி குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

அரசியல் தலையீடுகளை தவிர்த்து உரிம விதிகளின்படி குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2021-07-27 15:47 GMT
சென்னை, 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கனிம வளத்துறை இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், குவாரி உரிம விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினர். 

மேலும், சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும், அரசியல் தலையீடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, உரிம விதிகளின்படி குவாரிகள் குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தொழில்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்