பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா..? இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்
பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.;
கோப்புப்படம்
சென்னை,
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்த சூழலில் வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.
இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது. அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார்.
ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது:-
அமிர்தகுமார் (போட்டா ஜியோ) :- பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்படி 23 ஆண்டுகளாக போராடி வந்தோம். இந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதிய திட்டத்தை முதன்மையாக வைத்து பேசினோம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-ந் தேதி (இன்று) ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அது என்னவிதமான ஓய்வூதியம்? என்பதை முதல்-அமைச்சர்தான் தெரிவிப்பார். அதன் பிறகு அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டு, பின்னர் எங்களின் அறிவிப்புகளை வெளியிடுவோம்.
வெங்கடேசன், வின்செண்ட் பால்ராஜ், தியாகராஜன் (ஜாக்டோ ஜியோ) :- அனைவரும் மகிழும் வகையில் முதல்-அமைச்சர் நல்ல செய்தியை வெளியிடுவதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். முதல்-அமைச்சரின் அறிவிப்பையடுத்து எங்கள் கூட்டமைப்பு கூடி எங்கள் போராட்டம் குறித்த அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும்.
அதுமட்டுமல்லாமல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றுள்ள 48 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை முதல்-அமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே அறிவிப்பார் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். போராட்டம் நடத்தும்வரை காத்திருக்காமல் அழைத்து பேசியிருக்கின்றனர். 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தொடங்கி, 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு திருத்தங்களை முதல்-அமைச்சரிடம் கூறியிருப்பதாகவும், நாங்கள் எதிர்பார்க்கும் ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
6.50 லட்சம் ஊழியர்கள் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எங்களை அழைத்துக்கூட பேசவில்லை. ஈரோட்டில் ஒருமுறை மட்டும் அப்போதைய முதல்-அமைச்சரை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் சந்தித்து பேசினோம். ஆனால் இந்த ஆட்சியில் பலமுறை அழைத்து பேசியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஏடிஏஎப்) மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரகுமார் கூறுகையில், “பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்பது இந்த பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் தெரிய வந்தது" என்று அவர் தெரிவித்தார்.