முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.

Update: 2021-08-20 22:22 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப் பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் அக்கால்வாய்த் திட்டத்தின் பயன்பாடுகள் விவசாயிகளைச் சென்று சேருவதில்லை எனும் செய்திப் பெருங்கவலையைத் தருகிறது.

1958-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் வைகை அணை கட்டப்பட்டப்பிறகு, கடந்த 62 ஆண்டுகளில் 26 முறை மட்டுமே அணை நிரம்பியுள்ளதால், அணை நிரம்பும்போதுதான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கூறுவது உசிலம்பட்டி விவசாயிகளைத் திட்டமிட்டு ஏமாற்றும் கொடுஞ்செயலாகும்.

வைகை அணை தனது முழுக்கொள்ளளவை எட்ட வேண்டுமானால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை. இதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் மட்டும்தான் வைகை அணைக்குத் தேவையான நீர்த்தேவையை நிறைவு செய்ய முடியும் என்பதே புறச்சூழலாகும்.

2012-ம் ஆண்டு வழங்கப்பட்ட சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, 142 அடியாக நிலைநிறுத்தப்பட்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே இச்சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதே உண்மை நிலையாகும். எனவே முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்